ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்கதேசம் வெற்றி: இந்தியாவின் கனவு தகர்ந்தது

width="200"


 
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 5 லீக் ஆட்டம் முடிந்துவிட்டது.  இன்று கடைசி லீக் ஆட்டம் நடைபெற்றது. இப்போட்டியில் வங்கதேச அணியும் இலங்கை அணியும் மோதின. இலங்கை அணி வெற்றி பெற்றாலும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாது என்பதால் இந்த ஆட்டம் அவர்களுக்கு சம்பிரதாய ஆட்டமாகவே அமைந்தது. ஆனால் வங்கதேச அணி இப்போட்டியில் வென்றால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம் என்பதால் வெற்றி பெறும் முனைப்பு வங்கதேச அணியினரிடம் அதிகமாகவே இருந்தது.
 
டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் இலங்கை அணி முதலில் பேட்டிங்கை துவக்கியது.  தில்ஷானும், ஜெயவர்தனேவும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஜெயவர்தனே 5 ரன்கள் எடுத்த நிலையில் நஸ்முல் ஹொசைன் பந்தில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார்.
 
அவரைத்தொடர்ந்து 2வது விக்கெட்டுக்கு தில்ஷானுடன் சங்ககரா ஜோடி சேர்ந்தார். இந்த இருவரையும் நஸ்முல் ஹொசைன் ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் இலங்கை தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
 
இதனை அடுத்து கபுகேதராவும் திரிமன்னேவும் இணைந்து அணியை மீடுகப் போராடினர். சிறப்பாக ஆடிய கபுகேதரா அரைசதம் அடித்தார். அவர் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். திரிமன்னே மற்றும் உபுல் தரங்கா ஆகியோர் தலா 48 ரன்களில் ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
 
இதனால் இலங்கை அணி 49.5 ஓவர்களில் 232 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனை அடுத்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு வங்கதேச அணி பேட்டிங்கை  செய்ய இருந்தது.
 
திடீரென மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டத்தின் ஓவர்கள் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 40 ஆக குறைக்கப்பட்டது.
 
40 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்தால் வங்கதேச அணி வெற்றி என்றும் அறிவிக்கப்பட்டது. தனது பேட்டிங்கை துவக்கிய வங்கதேச அணியின்  நஸீமுதீன் 6 ரன்னும், ஜாஹிருல் இஸ்லாம் 2 ரன்னும், முஷ்பிகர் ரஹிம் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
 
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த தமிம் இக்பால், ஷகிப் அல் ஹசன் ஜோடி அதிரடியாக ஆடியது. தமிம் 57 பந்துகளில் 59 ரன்னும், ஷகிப் 46 பந்துகளில் 56 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் இணைந்த நசீர் ஹுசைன், மஹ்மதுல்லா ஜோடி இறுதிவரை ஆட்டமிழக்காமல், அணியை வெற்றி பெற வைத்தது. வங்கதேச அணி 37.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நசீர் ஹுசைன் 36 ரன்னும், மஹ்மதுல்லா 32 ரன்னும் எடுத்தனர்.

இன்றைய போட்டியில் இலங்கை வென்றிருந்தால், இந்திய அணி இறுதிப் போட்டி வாய்ப்பைப் பெற்றிருக்கும். இன்றைய வெற்றியுடன் சேர்த்து, மொத்தம் 2 வெற்றிகளுடன் 8 புள்ளிகளைப் பெற்ற வங்கதேச அணி, ஆசிய கோப்பை தொடரில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியாவும் 8 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால், இறுதிப் போட்டியில் ஆடும் வாய்ப்பை வங்கதேச அணிக்கு தாரை வார்த்துள்ளது.

ஒரு போனஸ் புள்ளி உள்பட 9 புள்ளிகளைப் பெற்ற பாகிஸ்தான் அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்த இலங்கை அணி, ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேற்றப் பட்டுவிட்டது. வரும் 22ம் தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான், வங்கதேச அணிகள் மோதுகின்றன.

வங்கதேச அணியை, இலங்கை வீழ்த்தினால் இறுதிப் போட்டியில் ஆடலாம் என நினைத்த இந்திய அணி மற்றும் இந்திய ரசிகர்களின் ஆசை, நிராசை ஆகியுள்ளது.




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India